Wednesday, December 07, 2005

 
இம்மாமனிதரைத் தெரிந்து கொள்ளுங்கள்.


நீங்கள் ஒரு நாத்திகராக இருக்கலாம். அல்லது கடவுள் நம்பிக்கையைப் பற்றிக் கவலைப்படாதவராக இருக்கலாம். அல்லது இன்று இவ்வுலகில் நிலவும் பல மதக் கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றுபவராக இருக்கலாம். நீங்கள் ஒரு பொதுவுடமை வாதியாகவோ, ஜனநாயகம் மற்றும் மனித சுதந்திரக் கொள்கையில் ஆர்வம் உள்ளவராக விளங்கலாம். நீங்கள் யாராக இருந்தாலும் சரி, உங்களது மதம மற்றும் அரசியல் கொள்கை எதுவாக இருப்பினும் சரி, உங்களது தனிப்பட்ட மற்றும் சமூக பழக்க வழக்கங்கள் எப்படி இருந்தாலும் சரியே. நீங்கள் அவசியம் இம்மாமனிதரைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இம்மாமனிதரைப் பற்றித்தான் பிரிட்டானியக் கலைக்களஞ்சியம், மதத்தலைவர்கள் அனைவரிலும் தலைசிறந்த வெற்றியாளர் என்று புகழ்கிறது. உலகப் புகழ் வாய்ந்த அறிஞர் பெர்னாட்ஷா, முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இன்று நம்மிடையே இருப்பாரானால், இன்று மானிட நாகரீகத்தையே அழித்திட முனைந்திருக்கும் பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு காண்பதில் வெற்றி கண்டிருப்பார் என்று இம்மாமனிதரைப் போற்றுகிறார்.

உலகில் தோன்றிய மனிதர்கள் அனைவரையும் விட இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவர் ஒரு அறநெறியைப் போதித்தார். ஓர் அரசை நிறுவினார். ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் ஒரு நாட்டை உருவாக்கினார். எண்ணற்ற சமூக, அரசியல் மாற்றங்களுக்கு வித்தூண்றினார். தாம் அறிவுறுத்திய கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒரு வலுவான, நிலையான சமுதாயத்தை நிறுவினார். மனித சிந்தனைகளையும், போக்கையும் புரட்சி மயமாக்கி புதிய சகாப்தத்தை உருவாக்கினார்.

அம்மாமனிதர் தாம் முஹம்மத் (ஸல்) அவர்கள்.

ஆம்! அவர்கள் தாம் மிகக் குறுகிய காலமாகிய இருபத்தி மூன்று ஆண்டுகளில் மாபெரும் சாதனைகளைப் புரிந்து பலரும் புகழும் பெருமை உடையவரானார்கள். அவர்கள் கி.பி.571 ஆம் ஆண்டு அரேபியா நாட்டில் பிறந்தார்கள். தம்முடைய அறுபத்தி மூன்று ஆண்டு வாழ்வுக் காலத்திற்குள் மக்கள் அனைவரையும் சிலைவணக்கத்தினின்றும் விடுவித்து, ஒரே இறைவனை வணங்கும் உன்னத நிலைக்கு உயர்த்தினார்கள். சூது, மது, மாது ஆகியவற்றில் மூழ்கிக் கிடந்த அம்மக்களை அவற்றினின்றும் நீக்கிப் பண்பும் பக்தியும் உடையோராய் மாற்றினார்கள். சட்டத்தையும் அரசையும் விரும்பாத அவர்களின் வாழ்வை ஒழுங்கும் கட்டுப்பாடும் உடைய வாழ்வாக மாற்றினார்கள். இத்தகைய முழுமையான சமூக மாற்றத்தை உலக வரலாறு அதற்கு முன்பு கண்டதில்லை. பின்பும் கண்டதில்லை.

நமது காலத்தின் தலைசிறந்த சரித்திர ஆசிரியர் லாமர்டின் மனித மேன்மையின் சிறப்பைக் குறித்து கூறுகிறார் :

உயர்ந்த லட்சியம், குறைவான வசதிகள் வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம் மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்? புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள். சட்டங்களை இயற்றினார்கள். பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவை தான்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்து விட்ட உலகாயதக் கோட்டைகளைத் தான் அவர்களால் நிறுவ முடிந்தது. ஆனால் முஹம்மத் (ஸல்) அவர்களோ போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள், அரசவம்சங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை. அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார்கள். வழிபாட்டுத் தளங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துக்களையும், கொள்கையையும், நம்பிக்கைகளையும், ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களைப் பதித்தார்கள். வெற்றியின் போது அவர்கள் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத் தன்மை, தாம் ஏற்றுக் கொண்ட ஒரு கது;தாக தம்மையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அவரது உயர் நோக்கம், ஆழ்ந்த விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் கொள்ளாமல் உலகப் பற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவர்களின் முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடன் அவர்கள் நடத்தி வந்த மெஞ்ஞான உரையாடல்கள், அவர்களின் மரணம், மரணத்திற்குப் பின்னரும் அவர்கள் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர்கள் ஓர் ஏமாற்றுக்காரர் என்றோ,மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிடவில்லை. மாறாக, சமயக் கொள்கை ஒன்றை நிலைநாட்டிட அவர்களுக்கிருந்த மனோ உறுதியைத் தான் பறைசாற்றுகின்றன.

இந்த சமயக் கொள்கை இரண்டு அடிப்படைகளைக் கொண்டது. ஒன்று, இறைவனின் ஒருமை, மற்றொன்று இறைவனின் ஸ்தூலப் பொருளற்ற தன்மை. முந்தியது இறைவன் என்றால் என்னவென்று எடுத்துரைக்கின்றது. பிந்தியது இறைவன் என்னவாக இல்லை என்பதைத் தெரிவிக்கிறது. ஒன்று, தவறான கடவுள்களைத் தனது பலத்தால் தூக்கியெறிகின்றது. மற்றொன்று, பிரச்சார துணையில் ஒரு புதிய கருத்தை உருவாக்க விழைகின்றது.

தத்துவ போதகர், சொற்பொழிவாளர், இறைத்தூதர், சட்ட நிபுணர், மாபெரும் போர் வீரர், கருத்துக்களை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுப்பூர்வமான கொள்கைகள், நம்பிக்கைகளை நிலைநாட்டியவர், மாயைகுள், கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒரு கொள்கை வழி உருவாக்கியளித்த மாமேதை, ஒரே ஆன்மீக தலைமையில் இருபது பூவுலக பேரரசுகளின் நிறுவனர் தாம் முஹம்மத் (ஸல்) அவர்கள்.

உலக மேதாவிகள் ஏதாவது ஒன்றிரண்டு துறைகளிலேயே உயர்ந்து நிற்கக் காண்கிறோம். ஆனால், வாழ்வின் அனைத்து துறைகளிலும் உன்னத நிலையில் வாழ்ந்து காட்டிய தனிப்பெரும் பெருமை அண்ணலாரையே சாரும், மேலும், அத்தலைவர்களின் வாழ்வும் அறிவுரைகளும் காலப் போக்கில் மங்கி விட்டன. அவர்களுடைய பிறப்பும் வளர்ப்பும், வாழ்வும் வாக்கும், சொல்லும் செயலும் பற்றிய பல்வேறு கருத்துக்களும், கற்பனைகளும், புரட்டல்களும் நிலவுகின்றன. ஆகவே அவர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு இன்றைய மனிதன் தன் தனிப்பட்ட வாழ்வையும் கூட்டு வாழ்வையும் அமைத்திட இயலாதவனாய் திக்கற்று இருக்கின்றான்.

இம் மாமனிதருடைய தனிப்பட்ட வாழ்வு, சமூக வாழ்வு, பொது வாழ்வு, அவர்களுடைய சொல், செயல் அனைத்தும் மிகவும் நுணுக்கமாக அவர்களுடைய தோழர்களால் குறிக்கப் பெற்றுள்ளன. அவை அணுவளவும் மாற்றமின்றி இன்னும் நமக்குக் கிடைக்கின்றன. இம் மாமனிதர் குறித்துப் பாதுகாக்கப்பட்ட இவ்விபரங்கள் (வரலாற்றுக் குறிப்புகள்) உண்மையானவை. சரியானவை என்று அவர்களைப் பின்பற்றுபவர்கள் மட்டுமல்ல. விருப்பு, வெறுப்பற்ற நிலையில் விமர்சிப்பவர்களும், திறந்த மனதுடன் ஆராயும் அறிஞர்களும் அவை சரியானவை தான் என்று சான்று பகர்கின்றனர்.

யங் இந்தியா-வில் முஹம்மத் நபியின் பண்பைக் குறித்து மஹாத்மா காந்தி கூறுகிறார் :

மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் மிகச் சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல் கொண்டேன். (அவ்விதம் அதனை நான் படித்தறிய முற்பட்ட போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது, வாள் பலமல்ல என்று முன் எப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உணர் பண்பு, எந்நிலையிலும் வாக்குறதியைப் பேணிக் காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவை தாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத் தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவை தான் காரணமே தவிர வாள்பலம் அல்ல!

ஹீரோஸ் அண்ட் ஹீரோ ஒர்ஷிப் - எனும் நூலில் வரலாற்று ஆசிரியர் தாமஸ் கார்லைல் வியக்கிறார் :

சண்டையும் சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நடோடிகளையும் தமது தனி முயற்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுக்குள்ளேயே நாகரீகம் மிகுந்த – பலம் பொருந்திய சமூகமாக எவ்வாறு தான் அவரால் உருவாக்க முடிந்ததோ!

கொள்கையளவில் அவர்கள் தந்த தத்துவத்தைக் காண்போம். மனித வரலாறு அறிந்த மத சமூக, அரசியல் தத்துவங்கள் யாவுமே அவர்கள் தந்த கொள்கை (இஸ்லாம்) க்கு இணையாக அமையவில்லை. அது மதச் சார்பற்றக் கொள்கையாக இருந்தாலும் சரியே! அல்லது சமூகம் அரசியல் சார்ந்த கொள்கையாக இருந்தாலும் சரியே. விரைந்த மாறி வரும் இவ்வுலகில் ஏனைய கொள்கைகள் தம்முல் மாற்றம் கொள்கின்றன. ஆனால் அண்ணலாரின் வாழ்க்கை நெறி (இஸ்லாம்) மட்டுமே கடந்த 1400 ஆண்டுகாலமாக அணுவளவும் மாறவில்லை. அதுமட்டுமின்றி மனித சிந்தனை செயல்களில் ஏற்பட்டு வரும் ஆக்கபூர்வமான ஆரோக்கியமான மாற்றங்களில் இஸ்லாம் தன்னுடைய செல்வாக்கையும் சாயலையும் படியச் செய்யும் சக்திமிக்கதாய் உள்ளது.

இப்பொழுது கொள்கைகள் செயலுருவில் மலர்வதைப் பார்ப்போம். உலகில் தோன்றிய சிந்தனைச் சிற்பிகள் தம் தத்துவங்களைச் செயலாக்கி, அதன் பலனைத் தம் வாழ்நாளில் காணக் கொடுத்து வைக்கவில்லை. ஆனால் இம்மனிதர் தம் அருமையான தத்துவங்களை அறிவுறுத்தியதோடு அன்றி தன் வாழ்நாளிலேயே அவற்றை வெற்றிகரமாகச் செயல்படுத்தினார்கள். அவர்களுடைய மரணத்தின் போது அவருடைய அறிவுரைகள் யாவும் நன்கு பயிற்சி பெற்ற பல்லாயிரக்கணக்கான மாந்தர் பின்பற்றக் கூடிய வாழ்க்கை நெறியாக மலர்ந்தன. அம் மனிதர்களில் ஒவ்வொருவரும் அன்னாருடைய அறிவுரைகளின் செயலுருவாகத் திகழ்ந்தார்கள். வேறு எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும், எந்த ஓர் அரசியல் - சமூக மத, திட்டமோ, தத்துவமோ, கோட்பாடோ இத்தகைய வியத்தகு முழுமையான சாதனையைக் கண்டதுண்டா?

இஸ்லாத்தின் கொள்கைகளைப் பற்றி எட்வர்ட் கிப்பன் மற்றும் ஸைமன் ஓக்லே எழுதுகின்றனர் :

ஓரிறைவனையும், இறைத்தூதர் முஹம்மதையும் நான் நம்புகிறேன் என்பது இஸ்லாத்தின் மிக எளிமையான அடிப்படைக் கொள்கையாகும். இறைவனைப் பற்றி அறிவார்ந்த சிந்தனையை எந்தச் சிலையாலும் குறைத்திட முடியாது. நபியின் மாண்புகள், மனித பண்புகளுக்கு உகந்தது. அவருடைய வாழ்வும், வாக்கும் அவருடைய தோழர்களின் சமயமாக பரிணமித்தது.

முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரேயன்றி வேறல்லர். ஆனால், ஓர் உயர்ந்த குறிக்கோளுக்காக உழைத்த மனிதர். ஒரே இறைவனை வணங்குமாறு மனித குலத்தை அழைப்பதும், இறைக்கட்டளையினடிப்படையில் நேர்மையான, சத்திய வாழ்வை மேற்கொள்ள மக்களுக்கு கற்பிப்பதும் அவர்களின் புனித இலட்சியங்களாகும். அவர் தம்மைத்தாமே ஓர் இறைத்தூதராக இறையடிமையாக பிரகடனப்படுத்தினார். அவருடைய ஒவ்வொரு செயலும், நடவடிக்கையும் இதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே அமைந்திருந்தது.

இந்தியாவின் புகழ் பெற்ற பெண் கவிஞர் சரோஜனி நாயுடு இஸ்லாத்தின் சமத்துவக் கொள்கையைப் பற்றிக் குறிப்பிடுகின்றார் :

ஜனநாயகத்தைப் போதித்து செயல்படுத்திய முதல் மதம் இஸ்லாம். மஸ்ஜிதில் நாளொன்றுக்கு ஐவேளை பாங்கொலி எழும் போது தொழகையாளர்கள் அனைவரும், ஆண்டி முதல் அரசர் வரை ஓரணியில் நின்று பணிந்து கூறுகின்றனர். இறைவன் மட்டுமே மிக உயர்ந்தவன். இஸ்லாத்தின் இந்த ஒருமைப்பாட்டை மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் என நிரூபிக்கும் பண்பைக் கண்டு நான் வியப்புறுகிறேன்.

புகழ்பெற்று வாழ்ந்தவர்களின் வாழ்வை தெய்வீகமாக்கும் முயற்சியில் உலகம் என்றைக்கும் சளைத்ததில்லை. அவர்களின் இலட்சியமும் இதனால் கற்பனை கலந்த கதையாக மாறி விடும். சரித்திரப் பூர்வமாகப் பார்க்கையில் முஹம்மத் (ஸல்) அவர்களின் சாதனையில் பத்தில் ஒரு பங்கைக் கூட இவர்கள் சாதித்ததில்லை. இருப்பினும், முஹம்மத் (ஸல்) அவர்கள் தம்மைக் கடவுள் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ, கடவுளின் மகன் என்றோ கூறிக் கொள்ளவில்லை. மாறாக, தாம் ஒரு சாதாரண மனிதர், மாந்தர் அனைவரையும் சத்தியப் பாதையின் பால் அழைக்கவும், அவர்களுக்கு முழுமையான வாழ்வு நெறியின் முன்மாதிரியாக அமையவும் இறைவனால் நியமிக்கப்பட்ட ஒரு தூதர் என்றே கூறினார்கள்.

மைக்கேல் ஹார்ட் மனித குல மேம்பாட்டிற்காக பங்காற்றிய சிறப்புக்குரியவர்களின் தொகுப்பை எழுதும் போது விவரிக்கின்றார் :

உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முஹம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ்சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே!

1400 ஆண்டுகள் கழிந்த பின் இன்றும் அவர்களுடைய வாழ்வும் வாக்கும் குறைக்கப்படாமலும் கூட்டப்படாமலும் எந்தவொரு மாற்றமுமின்றி நமக்கு அப்படியே கிடைக்கின்றன. மனித சமுதாயத்தின் பெரும் பிரச்சினைகளை அப்போதனைகள் அன்று தீர்த்து வெற்றி கண்டதைப் போலவே இன்றும் தீர்க்கும் வல்லமை வாய்ந்தவையாய் இருக்கின்றன. இதுவே வாய்மையாய் யாம் உலகிற்கு மொழியும் கூற்றாகும். வரலாற்றை ஆராயும் ஒவ்வொருவருக்கும் தென்படும் தவிர்க்க முடியாத முடிவாகும்.

நீங்கள் - அறிவும் ஆர்வமும் வாய்ந்த நீங்கள் - செய்ய வேண்டியதெல்லாம் இவ்வளவு தான். சற்று நிதானித்து, உங்களை நீங்களே வினவிக் கொள்ள வேண்டும். இந்தக் கூற்றுக்கள் எல்லாம் உண்மை தானா? இந்த அசாதாரணமான, புரட்சிகரமான சாதனைகள் உண்மையில் நடைபெற்றனவா? அவை உண்மையாயிருப்பின் இம்மாமனிதரை நான் அறிந்திருக்கின்றேனா?

இன்று வரையிலும் நீங்கள் அவர்களை அறிந்து கொள்ளவில்லை என்றால் இனியும் நேரத்தை வீணாக்காமல் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அதற்கு உங்களுக்கு அதிக நேரமும் சக்தியும் அவசியப்படாது. அன்றியும் உங்களுடைய இந்தத் தூய முயற்சி உங்கள் வாழ்வில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கும். ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்து விடும்.

வாருங்கள்! வியக்கத்தக்க இம்மாமனிதருடைய வாழ்வைப் பயில நாம் முற்படுவோம். இவரைப் போன்ற எந்தவொரு மனிதரும் இம் மண்ணுலகில் வாழ்ந்ததேயில்லை. அவருடய வாழ்வையும் முன்மாதிரியையும் பின்பற்றுவோமேயானால் நம் வாழ்விலும் பெரும் திருப்பம் ஏற்படும். உன்னதமிக்க ஒரு புத்துலகம் உருவாகும். இறைவன் அண்ணலார் மீது சாந்தி மழை பொழிவானாக!

Sunday, December 04, 2005

 
இறுதிநாள் (கியாமத்) நெருங்குகிறது!

உலக முடிவு நாள் எப்பொழுது சம்பவிக்கும் என்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தான். அதற்கு தீர்வாக மனிதர்களுக்கு இறுதிநாளின் அடையாளங்களை நினைவுபடுத்துகிறோம். பொறுப்புடனும், பொறுமையுடனும் படித்து மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றியும் பயந்து, சிந்தித்து உலக இறுதி நாளின் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்தி இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடப்போமாக என்று எங்களையும், உங்களையும் கேட்டுக்கொண்டு ஆரம்பம் செய்கிறோம்.
இந்த உலகம் நிரந்தனமானது அல்ல. பிறந்ததெல்லாம் இறந்தே ஆகவேண்டும் என்ற நியதியுடைய இவ்வுலகத்தின் அழிவை பற்றி விஞ்ஞானிகள் கூறும் பொழுது :- உலகின் அழிவு துவங்கிவிட்டது. நாம் ஒரு மாய நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்றோம். மனித இனம் என்ற சுவடே இல்லாமல் அழிந்தொழியும். பூமியானது தூள்தூளாகி அனைத்து மூலக்கூறுகளும், அணுக்களும் தூசியாகி விண்வெளியில் பறக்கும்” என்று விஞஞானிகள் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சாணியில் இருந்து கொண்டு ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.
இதனையே இறைவன் 1425 வருடங்களுக்கு முன்பு விஞ்ஞானம் என்றால் என்ன என்று தெரியாத காலகட்டத்திலேயே திருக்குர்ஆனில் கூறும் பொழுது…
பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது - இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது (99 : 1,2)
பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, (89:21)
இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, (56:5)
வானம் பிளந்து விடும்போது (84:1)
வானம் பிளந்து விடும்போது - நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது, (82: 1-4)
சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது (81:1)
இவ்வாறு இறைவன் திருக்குர்ஆனில் உலகின் அழிவைப் பற்றி முன்னறிவிப்புகளைச் சொல்லியிருக்கிறான்.
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உலகின் அழிவைப் பற்றிக் கூறும் பொழுது…
''நானும் இறுதி நாளும் இப்படி இணைத்து அனுப்பட்டிருக்கிறோம்"" என்று தன் இரு விரல்களையும் சேர்த்துப் பிடித்துக் காட்டினார்கள்.(புகாரி)
உலகம் அழிவை நெருங்கும் போது என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் என்று 1425 வருடங்களுக்கு முன்னரே இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் முன்னறிவிப்பு செய்துவிட்டான். அந்த முன்னறிவிப்புகள் ஒவ்வொன்றாக இந்த காலகட்டத்தில் அப்படியே பொருந்தி வருவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.
இதோ அம்முன்னிவிப்புகளில் ஒருசில…
'காலம் சுருங்கி விடும்" எந்தளவுக்கென்றால் 'ஒரு வருடம் ஒரு மாதம் போல் ஆகிவிடும், ஒரு மாதம் ஒரு வாரம் போல் ஆகிவிடும், ஒரு வாரம் ஒரு நாள் போல் ஆகிவிடும், ஒரு நாள்; ஒரு மணிநேரம் போல் ஆகிவிடும், ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் போல் ஆகிவிடும்" என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அரபுப் பிரதேசம் வளமே இல்லாமல் வெறும் பாலைவனமாக காட்சியளித்தது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''ஒரு காலம் வரும், இந்த அரபுப் பிரதேசம் செல்வச் செழிப்பாக, சோலையாக மாறும் வரை யுக முடிவுநாள் வராது"" (முஸ்லிம் -157)
விபச்சாரம் விவசாயமாய் நடக்கும். எந்த அளவுக்கு என்றால் பெண்கள் நடுவீதிகளில் நின்று விபச்சாரம் புரிவர். விபச்சாரத்தின் பக்கம் பகிரங்கமாக மற்றவர்களை அழைப்பாள். எவரும் அதனை ஆட்சேபிக்க மாட்டார்கள். அக்காலத்தில் நல்லவன் யாரெனில், இச்செயலை கொஞ்கம் மறைத்து செய்யக் கூடாதா? என்று சொல்பவன்;தான் அப்போது நல்லவன். (புஹாரி 5577, 5580)
(மும்பையில் மட்டும் 12000க்கும் மேற்பட்ட விபச்சார விடுதிகள் உள்ளன)
தகாத காரியங்களில் (விபச்சாரத்தில்) ஈடுபட்டால் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயங்கள் சந்தித்திராத உயிர்க்கொல்லி நோய் வரும். (இப்னுமாஜா)
(இந்த நவீன யுகத்தில் ''எயிட்ஸ்"" என்ற உயிர்க்கொல்லி நோய் வந்துவிட்டதை பார்க்கிறோம்.)
ஒரு காலம் வரும் ''மது அருந்துவது அதிகமாகிவிடும். தாறுமாறாக அதிகமாகும். அது இல்லாமல் இருக்கமாட்டார்கள்"". (புஹாரி : 5581, 5231)
என்னுடைய சமுதாயத்தில் மதுவுக்கு மாற்று பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர். (அப+தாவூத்)
அருகதையற்ற கெட்டவர்கள் தலைமைப் பதவியில் இருப்பார்கள். அநியாயக்கார அரசனை மக்கள் ஏற்றிப் போற்றுவர்.(புகாரி)
(இந்த இழிவான நிலையை குக்கிராமங்கள் முதல் வல்லரசு நாடுகள் வரை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.)
ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர். (முஸ்லிம் : 3921)
சங்கீத உபகரணங்கள் மிகுதியாகும். இசையில் மயங்கும் மனிதர்கள் பெருகுவார்கள்.(திர்மிதி)
காலையில் ஈமானுடனும் மாலையில் குப்ருடனும் மக்கள் தீமையில் உழல்வார்கள். (திர்மிதி)
எதற்காக யார் எப்படிச் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும். (முஸ்லிம்)
(ஒரு கோப்பை தேநீருக்கெல்லாம் கொலைகள் நடப்பதை நாம் பார்க்கிறோம்)
முஸ்லிம்கள் உலக சுகங்களுக்காகப் போட்டி போடுவார்கள். (புகாரி)
பூகம்பங்கள் அதிகம் ஏற்படும். (புகாரி)
பூமி அலங்கரிக்கப்படும். (திர்மிதி)
பருவ மழைக்காலம் பொய்க்கும்.
திடீர் மரணங்கள் அதிகரிக்கும், மனித ஆயுள் குறையும்.
முஸ்லிம்கள் பெருகியிருப்பர், ஆனால் கடல் நுரைபோல் இருப்பர்.
பெருமைக்காக பள்ளிவாசல் கட்டுவார்கள். (நஸயீ, அஹ்மது, இப்னுமாஜா)
யுக முடிவு நாளின் நெருக்கத்தில் ''இட நெருக்கடி ஏற்படும். மக்கள் ஒரே இடத்தில் வந்து குவியும் போது கட்டிடங்கள் உயரமாகும்"". (நகரங்களின் மக்கள் தொகைப் பெருக்கத்தையும் அதனால் அடுக்குமாடி கட்டிடங்கள் அதிகமாவதையும் நாம் காண்கிறோம்.)
வியாபாரமுறைகள் மாறும் (புகாரி)
(இன்டெர்நெட் மற்றும் கடன் அட்டைகள் மூலம் புதிய விதங்களில் வியாபார முறைகள் மாறியுள்ளதைக் காண்கிறோம்.)
பழங்கள் பெரிதாகும். ஒரு மாதுளையை ஒரு கூட்டம் சாப்பிடும். (முஸ்லிம்)
ஒரு தடைவை ஒரு மாட்டில் கறக்கும் பால் ஒரு கலத்திற்கே போதுமானதாக இருக்கும்.(முஸ்லிம்)
திருக்குர்ஆன் தங்க மையால் அச்சிடப்பட்டிருக்கும் ஆனால் அதனைப் பின்பற்ற மாற்றார்கள். (பைஹகி)
சத்திய விசுவாசிகள் அவமானப்படுத்தப்படுவர்.
ஃபித்னா (குழப்பம்) கடலைப்போன்று அடுக்கடுக்காய் தோன்றிக் கொண்டிருக்கும். (புகாரி, முஸ்லிம்)
சின்ன சின்ன விஷயங்களில் அலட்சியமாக இருப்பார்கள்.
பேச்சையே (அதிகம் பேசி வியாபாரம் செய்வதையே) பிழைப்பாக்கிக் கொள்வார்கள்.
சந்தைகள் அதிகரித்து அருகாமையில் வந்துவிடும்.
பொருளாதார வள்ச்சி அதிகமாகும். (புகாரி : 7121,1036,1424)
பொய் மிகைத்து நிற்கும். (திர்மிதி)
உங்களிடம் ஒரு காலம் வந்தால், பின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மேசமாகவே இருக்கும். (புகாரி :7068)
அமல்கள் (நன்மைகள்) குறைந்து போய்விடும். மக்களின் உள்ளங்களில் பேராசையின் விளைவாக கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். (புகாரி)
முஸ்லிம்கள் மறுமையை நேசிப்பதற்குப் பதிலாக இம்மையை நேசித்து மரணத்தை வெறுப்பார்கள்.
பசியோடு இருப்பவர்கள் உணவு பாத்திரத்தின் மீது பாய்வது போல் மற்ற சமூகத்தினர் என் சமுதாயத்தின் மீது பாய்வார்கள்.
எதிரிகளின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றி பயம் இருக்காது. முஸ்லிம்களின் உள்ளங்களில் கோழைத்தனம் வந்துவிடும். (அபூதாவூத்)

முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் படித்து செயல்பட வேண்டிய நபிமொழி:
நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான், அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319, 3456)
(சந்தனக்கூடு, கொடிமரம், சமாதி வழிபாடு, அவ்லியாக்களுக்கு நேர்ச்சை, கப்ரை உயர்த்திக் கட்டுதல், தஸ்பீஹ் மணி, மவ்லூது பாடல்கள், இசைக்கச்சேரிகள், உரூஸ் உண்டியல், யானை குதிரை ஊர்வலங்கள், இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள், வட்டி வாங்குதல், வரதட்சணை பிடுங்குதல், ஜோதிட நம்பிக்கை, திருமணத்தில் பெண்ணுக்கு தாலி கட்டுதல் மற்றும் வாழைமரம் நடுதல், பிறந்த நாள் விழா எடுப்பது, ஆண்கள் தங்கம் அணிவது இது போன்ற பழக்கவழக்கங்களை மாற்று மதத்தவரிடமிருந்து முஸ்லிம்கள் அப்படியே காப்பியடித்து பின்பற்றுவதை நடைமுறையில் கண்டு வருகிறோம்.)
எனவே சகோதர சகோதரிகளே! நாம் செய்ய வேண்டியது என்ன?
மரணவேளை எப்போது நிகழும் என்று எந்த மனிதனும் அறிய முடியாது. அவ்வேளை நெருங்கி வரும் முன் நாம் நமது அமல்களைப் பெருக்கிக் கொள்வோம். ''இஸ்லாம்"" இறைவனின் மார்க்கம்தான் என்று சந்தேகமற நம்பவேண்டும். இறைவன் ஒன்றைக் கட்டளையிட்டு விட்டால் இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் இறைவன் சொன்ன கட்டளைக்கு மாறு செய்யாமல் உறுதியாக நிலைத்து நிற்க வேண்டும். நமது ஈமான் (நம்பிக்கை) அதிகமாக வேண்டும்.
விபச்சாரம் போன்ற மானக்கேடான செயல்களிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளவேண்டும்.
நேர்வட்டி, ஏலச்சீட்டு, பிக்சட் டெபாசிட், எல்.ஐ.சி போன்ற அனைத்து வகை ஹராமான வட்டிகளைவிட்டும் முற்றிலும் ஒதுங்க வேண்டும்.
மது, சூதாட்டம், போதைப் பொருட்கள் போன்ற இறைவன் விரும்பாத அனைத்து செயல்களைவிட்டும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
ஏமாற்றுதல், அளவு நிலவையில் மோசடி செய்தல், அமானித மோசடி, வாக்கு மாறுதல், பொய் பேசுதல் போன்ற இழிசெயல்கள் நம்மைவிட்டு ஓடிவிட வேண்டும்.
அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசுவது, இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசுவது, பொறாமைப்படுதல், அவதூறு கூறுவது, குடும்ப சண்டைகள் போன்ற நாகரிகமற்ற செயல்களை விட்டும் நாம் விடுபட வேண்டும்.
இறைவனின் கட்டளைக்கு மாறான, அற்பச் செயலும், சமூகக் கொடுமையும், அக்கிரமமும், அநியாயமும், அநாகரிகமுமான வரதட்சணை போன்ற பாவங்களிலிருந்து நாமும் விலகி, நம் சமூகத்தையும் விலக்க வேண்டும். இவ்வரதட்சணைக் கொடுமைக்கு துணைபோகிறவர்கள், இக்கொடுமையை இழைப்பவர்கள், இதற்கு ஆதரவளிப்பவர்கள் அனைவரும் இறைவனின் முன்னிலையில் தண்டனைக்குரியவர்கள் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
எல்லாவற்றையும் விட மிகப்பெரிய அநியாயமும், அக்கிரமுமான இறைவன் மன்னிக்காத, இறைவன் விரும்பாத சமாதி வழிபாடு, பெரியேர்களுக்கு நேர்ச்சை செய்வது, ஜோசியம் பார்ப்பது, ஜாதகம் பார்ப்பது, நல்லநேரம் என நம்புவது, செய்வினைகளை நம்புவது, குத்பியத் மவ்லிது போன்ற இணை வைத்தல்கள் (ஷிர்க்) என்னும் மகா பாவங்களிலிருந்தும், மூடபழக்கவழக்கங்களிலிருந்தும் நம்மை நாம் காத்துக் கொண்டு இந்த மாய உலகத்தில், நாம் எதற்காக படைக்கப் பட்டிருக்கின்றோம்? நமது இலட்சியம் என்ன? என்று நம்மை நாமே உணர்ந்து செயல்படுவோமாக!
இன்று இஸ்லாத்தின் எதிரிகளால்; ''இஸ்லாமிய பயங்கரவாதம்"" என்ற விஷப் பிரச்சாரம் உலக அளவில் முழுவீச்சில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இக்காலச் சூழ்நிலைiயின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, திருக்குர்ஆனை அதன் மொழியாக்கத்தோடு நாம் படித்து சிந்தித்து அவைகளை நாம் பின்பற்றி நடப்பது மட்டுமல்லாது மாற்று மத நண்பர்களுக்கும் எடுத்துரைத்து, பிற சமூகமக்களுக்கும் திருக்குர்ஆனை படிக்கக் கொடுத்து ''இஸ்லாம் தீவிரவாதத்தைத் தூண்டும் மார்க்கமல்ல மாறாக சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம்"" என்பதை எடுத்துக் கூறும் முக்கியக் கடமைகளும் நம்மீதுள்ளது என்பதையும் புரிந்து நடப்போமாக!
நமது வாழ்க்கை நெறி திருக்குர்ஆனாக இருக்கட்டும்!
நமது வழிமுறை இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அடிச்சுவடாகவே அமையட்டும்!!
இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. மறுமை வாழ்வுதான் உண்மையான வாழ்வாகும். அவர்கள் (மனிதர்கள்) அறியக்கூடாதா? (திருக்குர்ஆன் 29:64)
நேரம் நெருங்கி விட்டது (திருக்குர்ஆன் 54:1)
மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது. ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 21:1)
சிந்திப்போம்!! ஈருலக வெற்றியினைப் பெறுவோம்!!!.

நன்றி J.A.Q.H பிரசுரம்.

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]